May 25, 2008

செயல் விளைவு தத்துவம் cause and effect வேதாத்திரி மகரிஷி

செயல் விளைவு தத்துவத்தை இறை நீதி என்று கருத்தில் கொள்ள வேண்டும். எங்கும் எல்லா பொருட்களாகவும், பொருட்களோடும் நிறைந்தியங்கும் எல்லா வகையான ஆற்றல்களாகவும் இயங்கிக் கொண்டிருப்பது அழுத்தம் எனும் எல்லையற்ற இறையாற்றலேதான். இறைவெளியாக் இருந்து கொண்டு தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலாக விளங்குவது தான் ஆதிசக்தியெனும் இறையாற்றலாகும்.

இவ்வாற்றல்தான் எந்த இடத்திலும் எந்த உருவத்திலும் அததற்கேற்ற இயக்கச் சீர்மையோடு செயலாற்றி வருகிறது. தோற்றப் பொருட்களில் இவ்வாற்றல் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்றிணைப்புச் சீர்மையாக இயங்குகின்றது. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும் கை, கால், வாய், குதம், பால் குறி என்ற ஐந்து தொழில் கருவிகளும் அமைந்துள்ள மனிதனிடத்தில் இறைநிலை முதலாக மனித மனம் வரையில் நடைபெற்ற பரிணாம சீர்மையை உணர்ந்துகொள்ளும் மனமாக இறையாற்றல் முழுமை பெற்றுள் இயங்குகிறது.

ஆராய்ந்து தெளியுமிடத்து எல்லையற்ற அருட்பேராற்றலான இறையாற்றலேதான், தனது பரிணாமச்சிறப்பில் மன ஆற்றலாகவும் செயல்புரிகின்றது. ஆயினும் இறையாற்றலோ எல்லையற்ற இறைவெளியாக இருந்துகொண்டே அதனுள் அடங்கியுள்ள ஒவ்வொரு பொருளிலும் அதனதன் தன்மைக்கேற்பவும். அளவுக்கேற்பவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மன ஆற்றலோ சீவ இன உடலில் மையம் வைத்துக்கொண்டு எந்தப் பொருளோடு தொடர்பு கொள்கிறதோ அந்ததந்த அளவில் விரிந்தும், சுருங்கியும் எல்லை கட்டிக் கொண்டும் இயங்குறது. இறையாற்றல் பருமன், விரைவு, காலம், தொலைவு என்ற நான்கு கணக்குகளுக்கு உட்படாதது.

மன ஆற்றலோ எப்போதும் இறைநிலையை உணர்ந்து அதனோடு இணைந்திருக்கும் காலம் தவிர

  • பருமன்,
  • விரைவு,
  • காலம்,
  • தொலைவு

என்ற கணக்கில் தான் இயங்கி கொண்டிருக்கும். இதோடு மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பும் உண்டு. எப்பொருளை நினைத்தாலும், அதைப்போலவே வடிவத்தாலும், குணத்தாலும் தன் மாற்றம் பெறவல்லது அது.


கவி

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்;

இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

பேரியக்க மண்டலம் முழுவதும் இறையாற்றலின் பரிணாம வடிவங்களும், இயக்கச் சிறப்புகளுமேயாகும். மன ஆற்றலோ இறையாற்றலின் விளைவுகளில் ஒரு சிறு பகுதியேதான். ஆயினும், மன ஆற்றலுக்கு ஒரு தனி மதிப்பும், சிறப்பும் உண்டு. இறையாற்றலின் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் எனும் மூன்று சிறப்புகளையும், இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் நான்கு நிலைகளால் உணர்ந்து இரசிக்கவல்லது மனம். மேலும் இறையாற்றலின் சிறப்புகளை, விளைவுகளைத் தனது விருப்பத்திற்கேற்ப தனது உடற்கருவிகளின் ஆற்றலுக்குகுட்பட்டு இயக்க மாறறம் செய்து துய்க்கும் வல்லமையும் உண்டு.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மனம், இறையாற்றலின் இயக்கச் சீர்மையினை உணர்ந்து, அதற்கு முரண்படாத முறையிலே, தனது விளைவுகளைத் துய்க்கும் போது, மனம் ம்ற்றும் உடல் என்ற இரண்டுக்குமே பொருத்தமாய் அமையும் உண்ர்வுகள் உண்டாகும்.

மேலும்.

இறையாற்றலின் தன்மைகளையும், சிறப்புகளையும் அறியாமலோ, அலட்சியம் செய்தோ, உணர்ச்சி வயத்தால் தன் முனைப்பு கொண்டோ அளவு மீறியும், முறை மாறியும் மன ஆற்றல் செயல் புரியும் போது, அச்செயலுக்கேற்ப ஏற்படும் துல்லியமான விளைவுகள்தாம் செயல் விளைவு நீதி என்று வழங்கப்படுகிறது. சிறிதளவும் தவறாமலும் பிழையில்லாமலும், அன்பும் கருணையுமே இயல்பாக அமைந்துள்ள இறைநிலையானது சீவன்களிலிருந்து எழும் செயல்களுக்குத் தக்கபடி அளிக்கின்ற இவ்விளைவுதான் கூர்தலறம் என்று மொழி வழியே தமிழில் கூறப்படுகின்றது. இதுவேதான் இறைநீதியாகும்
கவி
தப்புக் கணக்கிட்டுத் தானொன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற்கேற்றபடி
அப்போதைக்கப்போதே அளிக்கும் சரிவிளைவு
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதையுணரார்.

வேதாத்திரி மகரிஷியின் செயல் விளைவு தத்துவம் என்ற நூலிலிருந்து ……

மகரிஷியின் செயல் விளைவு தத்துவம் என்ற நூலிலிருந்து ……