May 27, 2008

எண்ணம் எங்கும் செல்லும்


எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.


"
எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

--
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி