May 27, 2008

குண்டலினி யோகம்

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

வேதாத்திரி மகரிஷி