Jul 7, 2008

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம் (We can meditate at any time)



தீட்டா அலை'யிலும், 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கா. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

we get accustomed being in a state of constant awareness in ‘theta’ or ‘alpha’ wave lengths, the thought waves of others, though capable of causing harm or turning our mind impulsive; will not affect us. For example, consider a situation where three or four radio stations are airing four different programs. We can hear only that program whose frequency to which we have tuned our radio set. Though other frequency waves reach the radio set, we will not hear them. Similarly we will receive only what we seek if we stay away from unwanted oscillating thoughts and its influences. We will think only of things that we ought to do. The capacity of our mind increases to an extent that we will be able to accomplish what we think. What happens when the ability of mind increases ? Wherever we go, people will get self confined to the wave length and thoughts will arise within them to realise and understand our value. Where ever we go, it will spell success for us.

Even if some obstruction arises anywhere hindering the success, that does not cause harm to us. "In order to divert us, that which is unnecessary in this wavelength is being repelled and hence that action was not accomplished" - If we realise this and be at peace with ourselves; then whatever action that needs to take place will happen by itself at the right time and right place.

Aspirants used to ask me, “Shall we meditate while studying? Shall we meditate during night time? ”. Meditation does not require a specific time or direction. Meditation is a practice to commune the consciousness with the vast universe. It is not necessary to observe time constraints. It can be performed at any time. To the extent you realize this and perform meditation deeply; the meditation will empower you with a state of awareness necessary to stay away from trouble, solve them in an intellectual manner and prevent them from arising in future.

Jun 24, 2008

தியானத்தின் நன்மைகள் (Benefits of Meditation) -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.

2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :

1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.

4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Jun 23, 2008

எண்ணப் பதிவு --- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

May 27, 2008

எண்ணம் எங்கும் செல்லும்


எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.


"
எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

--
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


குண்டலினி யோகம்

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

வேதாத்திரி மகரிஷி